Saturday, December 3, 2011

சமச்சீர் கல்வி - கல்வியும் தரமும் ஒரு பார்வை

                எதையோ சொல்லி வைக்கனும்ன்னு எழுதி வைக்கல இதை. நாம 65வருஷமா வளந்துக்கிட்டேதான் இருக்கோம். சில அடிப்படை விஷயங்களை செய்யாத வரை வளந்துக்கிட்டேதான் இருப்போம் இன்னும் பல வருடங்கள் கடந்தாலும்.
                    
                 கல்வி ஒரு மனிதனின் தனிப்பட்ட உரிமை. இங்கு பலரின் ஒரு வேளை உணவே கேள்விக் குறியாகும் போது கல்வி எட்டாக்கனிதான். 37ரூபாய்க்கு மேல் தின வருமானம் உள்ளவன் நாட்டின் வறுமைக் கோட்டிற்கு மேலானவர் என்று ஏமாற்றும் அரசிடம் இருந்து பசித்தவனுக்கு சோறு கிடைக்கப் பெறுவதே கஷ்டம். கல்வி? அதில் தரமான கல்வி? 

                சமச்சீரான கல்வி என்பதே உறங்கிக் கிடந்த அரசினைத் தட்டி எழுப்பி கடந்த ஆட்சியில் தான் வெகுகாலத்துக்குப் பிறகு அதான்  செயல்முறைக்கான முன்னேற்பாடுகள் தொடங்கின. தி.மு.க.வின் திட்டம் என்ற ஒரு காரணத்தால் கண்மூடித்தனமாக மாண்புமிகு முதலமைச்சர் ஜெயலலிதா அந்த திட்டத்தை கோட்டைக்கும் கோர்ட்டுக்கும் பந்தாடினார். 

              அது ஒரு பக்கம், நடந்து கொண்டிருப்பது என்ன?
 
              சமச்சீர் கல்வி பாடத்திட்ட அளவில் பொதுமையாக்கப்பட்டுவிட்டது. இது நமது முதல் வெற்றி. மெட்ரிக் பள்ளிகளுக்கு இது ஓர் பேரிடி. அவர்களின் வியாபாரத்தந்திரம், "தரமான கல்வி" எங்கள் பள்ளிகளின் சூழலிலே சாத்தியம் என்ற கூற்றை கூவிக்  கொண்டிருக்கின்றன. அரசுப் பள்ளிகளின் ஆசிரியப் பெருமக்களே அதை வழிமொழிந்து தம் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்ப்பது வருத்தத்திற்குரியது. மெட்ரிக் பள்ளிகள் என்ற தனி வர்க்கம் என்று ஒழிகிறதோ அன்றே சமச்சீர் கல்வியின் வெற்றி.அது  பீஸ் கட்டியே பீசாப் போன பல நடுத்தர பெற்றோரின் வயிற்றில் பால் வார்த்ததாக இருக்கும்.


            டாஸ்மாக்கையும் எலைட்டையும் மேம்படுத்தும் அரசு, அரசுப் பள்ளிகள், அரசு சார்ந்த பள்ளிகளின் கல்வித் தரம், பள்ளி சூழல், ஆசிரியர்களின் திறன், எண்ணிக்கை மற்றும் விளையாட்டு மைதானங்கள் என அனைத்தையும் மேம்படுத்த வேண்டும். 

           25சதவீத பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மாணவர்களை சேர்க்கும் மெட்ரிக் பள்ளிகளுக்கு உரிமம் நீட்டிக்கப் பட வேண்டும். 

           நடுத்தர மக்களின் பிள்ளைகளுக்கே தரமான சமச்சீர்க் கல்வி என்பது எட்டாக்கனி. 
 
           இதில் அன்றாடம் அரை வயிறு நிரப்ப வறுமைக்கோட்டிற்கு கீழே  பஞ்சர் ஒட்டும், ஹோட்டல்களில் டேபிள் துடைக்கும், பேப்பர் பொறுக்கிக் கொண்டிருக்கும், பிச்சை எடுக்கும் எண்ணற்ற குழந்தைகளின் எதிர்காலம் அவர்களுக்கு தேவையான குறைந்த பட்ச கல்வியை கொடுப்பதில்தான். தரமானதாக.

எப்போது???????