Wednesday, March 21, 2012

எங்க அந்த திருடன்!?

நான் அப்போ மூனாங் கிளாசு படிச்சிட்டு இருந்தேன்னு நினக்கேன். மேக்கருந்து(நெல்லைக்கு மேற்கே இருக்கும் விகே.புரம்) சந்திரன் மாமா வீட்டுக்கு அன்னிக்கு வந்துருந்தாங்க. சந்திரன் மாமா வந்தாலே ஒரே ஜாலிதான். அவங்க அடிக்கிற அரட்டைல நரசிம்மராவு கூட சிரிச்சிடுவாரு. ராத்திரி எட்டு மணி இருக்கும். சட்டுன்னு கரண்ட்டு போயிட்டு. பொதிகைல "துப்பறியும் சாம்பு" பாக்கலாம்ன்னு நினச்சேன். கட்டமனாப் போற கரண்ட்டு போயிட்டே! என்ன செய்ய!? அதான் சந்திரன் மாமா இருக்காங்களே! அவங்க கத சொல்ல ஆரம்பிச்சிட்டாங்க. தார்சால மாமாவ சுத்தி பொடுசுங்க எல்லாம் வாயப் பிளந்துட்டு கத கேட்டுட்டுருக்கோம்.

திடீர்ன்னு வெளிய ஏதோ சத்தம்! யாரோ திடுதிடுன்னு ஒடுற சத்தம்ன்னு நினைக்கேன். எங்க பூட்டியாச்சிக்கு ஏதோ ஒரு அனுபவ துளிர் மிடுக்குன்னு வந்துச்சு போல. "ஏலே சந்திரா எல்லாத்தியும் உள்ளக்கூட்டியா! ஏதோ களவாணிப் பயலா இருக்கப் போறான்! அந்த கிரில் கேட்ட சாத்தி பூட்டுடா நடராசா'ன்னு இன்னொரு மாமவுக்கு ஆர்டர் போச்சு". ஆச்சி நினச்சாப்ல இன்னும் நாலஞ்சு பேரு யாரையோ தொறத்தி ஒடுறாங்க. திருடனேதான்.90'களில் மொத்தம் 160வீடுகளே உள்ள அந்த ஊரில் திருட்டு சகஜமாகிப் போன நேரம்.

பெருசுங்க எல்லாம் பயந்து கிடக்காங்க. தகவல் சொல்ல அண்டவீட்லருந்து யாரும் வரல. கிட்டத்தட்ட எல்லார் வீடும் பூட்டி உள்ள அடஞ்சிருப்பாங்க. ஊரே இருட்டுலக் கிடக்கு. ஒரு அரமணி நேரங்கழிச்சு டூரிஸ்ட் நைனா தாத்தா பெரிய பேட்டரி லைட்டோட வீட்டுப் பக்கம் வந்தாரு. கூட கம்பு, கட்டையோட நாலு பேரு.

பூட்டியாச்சி தொண்ட செரும சன்னல் பக்கமா தலைய சாச்சு சத்தம் குடுத்துச்சு. "என்னவே நைனா! என்ன ஆச்சு? களவாணிப் பய எவனும் ஊருக்குள்ள புகுந்துட்டானா?"ன்னு ஆச்சி கேட்டா. அவரு "ஆமா ஆச்சி வடக்கால கோழிப் பண்ணேல திருடிட்டானுக. பண்ணயார் வீட்ல குடியிருந்த பொம்பளை செயின அத்துட்டானுக. இந்த கரண்ட்டு கம்பிய வேற இவனுவ அத்துப்பூட்டானுவோ. அதான் அவனுகள தேடிட்டு இருக்கோம். நாலு பக்கமும் ஆள் போயிருக்கு; கதவ நல்லா பூட்டிக்கோங்க"ன்னு சேதி சொல்லிட்டுப் போனாரு.

               நேரங்கடந்துருச்சு. தெருவே வெறிச்சோடிக் கிடக்கு. ஒரு ஓம்பதர இருக்கும். சந்திரன் மாமா கிரில் கேட்ட தொறந்து தையிரியமா வெளிய வந்து நின்னாங்க. எங்களுக்கு ரொம்ப பயம். தொறந்த நிமிஷத்துல வீட்டுக்குள்ள திருடன் புகுந்துட்டா என்ன செய்யன்னு பயந்து கிடந்தோம். இந்த மாமா கிழக்கையும், மேக்கையும் ஒரு நோட்டம் போட்டுட்டு. "ஏ! அவனுவ இன்னுமா இங்க சுத்திட்டு இருக்கப் போரானுவ. போயி பொழப்பப் பாருங்கடே. ஏ ஆச்சி நீ சோத்தப் போடு"ன்னு மாமா சத்தம் குடுக்க ரெண்டு பேரு பேசிட்டே வாசல் பக்கம் மாமவ கடந்து போனாங்க.

மாமா ரொம்ப ஆர்வமா போன ஆளுங்கட்ட "அண்ணாச்சி அந்தக் களவாணிப் பயலுவோ என்ன ஆனானுவோ? பிடிபட்டாணுகளா?"ன்னு கேக்க, அவங்க மாமாட்ட " களவாணிப் பயலுக வடக்கால ஓடிப் போய்யிட்டானுவ அண்ணாச்சி. பிடிக்க ஆளுங்க போயிருக்கு. நாங்க ஈபி ஆபீஸ் வர போகுதோம்.வாரீகளா"ன்னு பதில் வந்தது. மாமா "ஓ! சரிங்க அண்ணாச்சி, இருக்கட்டும். நீங்க அந்த சோலிய முதல்ல பாருங்க."ன்னு சொல்லிட்டு உள்ள வந்தாங்க.

செத்த நேரத்தில் பரபரப்புடன் டூரிஸ்ட் நைனா தாத்தாவும், கூட மிட்டாய்தாத்தாவும் கூட நிறைய ஆட்களும் வேகமா வந்தாங்க. மாமா வாசலக் கடக்கும் போது "ஏம்ப்பா இங்க ரெண்டு பேரு போனத பாத்தியா?"ன்னு மிட்டாய் தாத்தா கேட்டாங்க. "ஆமா ரெண்டு பேரு ஈபி ஆபீஸ் போறாதா சொன்னாங்க. என்ட நின்னு பேசிட்டு இப்பதான் இந்தாக்குல போனாங்க. ஏன்? என்ன விசயம்"ன்னு சந்திரன் மாமா திரும்பக் கேட்டாங்க.

நைனா தாத்தா "அய்யோ அவனுவ சாவகாசமாவா உம்மட்ட பேசிட்டுப் போனானுவ? உங்கள ஒன்னும் பண்ணலையா? அவனுவ கைல்ல கத்தி வச்சுருக்கல?"ன்னு கேக்க, மாமா பதற்றத்துடன் "கத்தியா! என்னவே சொல்லுறீரு? அவனுவ உள்ளூர்வாசின்னுல நினச்சேன்" ன்னு நடுநடுங்கி கேக்க, நைனா தாத்தா "அவனுவ திருட வந்த களவாணிப் பயலுவ. நீங்க தையிரியமா மறிச்சுப் பேசிருக்கீகளே! முன்னமே தெரிஞ்சிருந்தா புடிச்சிருப்பீக போல தம்பி." ன்னு மாமாவ கிலிஏத்திட்டுப் போனாங்க. கொலப்பசில இருந்த மாமாவுக்கு பயத்துலயும், கடுப்புலயும் ஈபிக்குப் போறதா சொல்லிட்டுப் போன அந்த ரெண்டுக் களவாணிப் பயலுக நினச்சு சோறு இறங்கல அன்னிக்கு ராத்திரி.

இத்தனை வருஷம் கழிச்சு இப்போ நினச்சாலும் சாகவாசமா திருட்டுப்பயலுகட்ட வெள்ளந்தியா பேசின சந்திரன் மாமாவ நினச்சா சிரிப்புதான். :)



4 comments:

  1. Night time la EB office ku ean poranga...doubt !!!

    ReplyDelete
    Replies
    1. அப்பெல்லாம் வீட்ல ஃபோன் எங்க இருந்தது? கர்ண்ட்டு கம்பி அந்து போச்சுன்னா ஈபி ஆபீஸ் போயி யாராச்சும் சொல்லிட்டு வரணும்.

      Delete
  2. thayavu seithu thamizhil ezhuthavum

    ReplyDelete
    Replies
    1. ஙே!!! :P இது தமிழ்தாங்கே! :)

      Delete